எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! நீ நதிபோல ஓடிக்கொண்டிரு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2013 03:01
*மனஅமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்கள் குற்றங்களை எண்ணிப் பாருங்கள். *நம்பிக்கையும், மனஉறுதியும் வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் பெற்றதற்குச் சமமாகும். *உங்களால் யாருக்காவது மனமகிழ்ச்சியைத் தரமுடியுமானால் வாழ்வின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். *இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனோ அவன் புண்ணியவான். *சோம்பலினால் உடல் மட்டுமல்ல, மனவலிமையும் போய்விடும். சுறுசுறுப்பால் சோம்பலை துரத்தியடியுங்கள். *நாள் முழுக்க பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. இருந்தாலும் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டே கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருங்கள். *எல்லாச் செயல்களின் பலனையும், புகழையும் இறைவனிடம் ஒப்படையுங் கள். நதிநீர் போல ஓடிக்கொண்டே இருங்கள். *கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியாது. இவ்விரண்டு பண்புகளும் அனைவருக்கும் அவசியம். *மனமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும் வாழ்வில் விளைவதில்லை. *இறைவனின் விருப்பத்தால் தான், உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின் றன. இருந்தாலும் மனிதன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறான். *தியானம் செய்வதை அன்றாடக் கடமையாக்குங்கள். அதில் அன்றன்று செய்த நன்மை தீமைகளை நீங்களே எண்ணிப்பார்த்து உங்களை நெறிப்படுத்துங்கள். *துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி. *சாமான்யன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஞானியோ மரணத்தைக் கண்டு சிரிக்கிறான். இந்த இருவருக்கும் உள்ள வேற்றுமை இது தான். *அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும். *கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள். *வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள். *அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். *யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி. *சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும். *யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு. -சாரதாதேவியார்