திருப்பூர்: உலக நலன் வேண்டிஒன்பது வயது மாணவன், சிவன்மலை கோவிலின், 496 படிகளிலும் யோகாசனம் செய்தபடி சென்று, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ராஜேந்திரம் கிராமம், தண்ணீர்ப்பள்ளியை சேர்ந்த துரைமுருகன் மகன் ராகவன், 9; அரசு நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். உலக நலன் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி, கடந்த ஒன்பது நாட்களாக, குடும்பத்தினருடன் ராகவன் விரதம் இருந்தார். நேற்று திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ராகவன் வந்தார். மலையில் 496 படிகளிலும், யோகாசனம் செய்தபடி மலையேறி, பின் சுவாமி தரிசனம் செய்தார். ராகவன் கூறுகையில்,‘‘சில ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். யோகா செய்தபடி சென்று முருகரை வழிபட வேண்டுமென, பெற்றோரிடம் கூறினேன்; அவர்களும் அழைத்து வந்தனர். அடிவாரத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு, ஒவ்வொரு படியிலும், யோகாசனம் செய்தபடி மலைமீது சென்றேன்; பெற்றோர் உடன் வந்தனர். மலை உச்சிவரை, 100 யோகாசனங்கள் செய்தேன். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தேன்,’’ என்றார்.