காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 1.33 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தின் கூரை, 1 மாதத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாயில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறுவதால், இக்கோவிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்து முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், திருக்கோவில் நிதி, ஆணையர் பொது நல நிதி என, மொத்தம் 1.33 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்த ஆயிரங்கால்மண்டபத்தின் கூரையின் மேற்கு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி வழியாக உள்ளே செல்லும் மழைநீரால் மண்டபத்தின் கூரை மேலும் சேதமடையும் சூழல் உள்ளதோடு, மண்டபத்தின் உட்பகுதி மழைக்கு ஒழுகும் நிலை உள்ளது. தரமற்ற முறையில் ஆயிரங்கால் மண்டபத்தின் கூரை சீரமைப்பு பணி நடந்ததால், ஒரே மாதத்தில் கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்துள்ள திருப்பணியின் முழு தரத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேற்றும் சென்று வந்தேன். ஆனால், ஆயிரங்கால் மண்டபத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் துறை சார்ந்த பொறியாளர் மூலம் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.