பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
காயல்பட்டணம்: காயல்பட்டணம் புனித முடியப்பர் ஆலய திருவிழா பங்குமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடம்பர திருவிழா திருப்பலியில் சிறுவர், சிறுமியர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. காயல்பட்டணம் கொம்புதுறையிலுள்ள புனித முடியப்பர் ஆலயம் மகிவும் சிறப்பு வாய்ந்ததாகும். முடியப்பர் ஆலயத்திருவிழா ஆண்டு தோறும் பங்குமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு செல்வராஜ் திருவிழா கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து திருவிழா நாள்தோறும் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் திருப்பலி, மறையுரை நற்கருணை ஆசீர் மற்றும் ஆன்மிகம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2013ம் ஆண்டான புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஆன்ட்ரூ டிரோஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இரவு சப்பர பவனி நடந்தது. இதில் பங்குமக்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், ஆடம்பரதிருவிழா திருப்பலி நடந்தது. விழாவில் 40க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. அதன்பின்னர் காலை முதல் மாலை வரை சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவில் பங்குத்தந்தைகள் விக்டர் லோபா, ரூபட் அருள்வளன், இருதயராஜ், சேவியர்ராஜ், ஜான்செல்வம், ஜோசப், ஜெகதீஷ், ஜெனிஸ், வில்லியம்சந்தானம், மீனவர் சங்க கூட்டமைப்பு இயக்குநர் ராயப்பன் மற்றும் கொம்புதுறை, மணப்பாடு, வீரபாண்டியபட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிறிஸ்தவர்கள், பங்குமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு ஆலயம் இரவு வண்ணவிளக்கு அலங்காரத்துடன் காட்சி அளிக்க கொம்புதுறை முழுவதும் திருவிழா உற்சாகம் களைகட்டி இருந்தது.