பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா துவக்கியது. முதல் நாளான நேற்று ஆஞ்சநேயர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வடமாலையுடன் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் பால ஆஞ்சேயநர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்திவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நான்கு நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை துவங்கியது.காலையில் ராமயக்யம், அனுமன் மூலமந்திர ஹோமம், அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர் எஸ்.வி.எஸ்.கே பஜனை நடந்தது.இதனை தொடர்ந்து ஆஞ்சயேநருக்கு மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், நெல்லிப்பொடி ஆகிய பத்து வகையான பொருட்களால் தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் பால ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, வடமாலை சாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பாலாஜி அய்யங்கார் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.மாலையில் ஆஞ்சநேயருக்கு மாக்காப்பு அலங்காரம் மிக நேர்த்தியாக அற்புதமான முறையில் செய்யப்பட்டிருந்தது. மாக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பால ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பின்னர் அதிகமான வடமாலையும் சாத்தப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடந்தது. பூஜைக்கு பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை, எஸ்.வி.எஸ் சபா பஜனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனுமன் ஜெயந்தி துவக்க நாளான நேற்று பால ஆஞ்சநேயரை தரிசிக்க பெருமாள் கோயிலில் கூட்டம் அலைமோதியது. இன்று இரண்டாம் நாள் ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், நாளை வெண்ணைக்காப்பு அலங்காரத்திலும், வரு 11ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று புஷ்பாஞ்சலியும் விமரிசையாக நடக்கிறது.