திருப்போரூர் பிரணவ மலையில் உள்ள கைலாசநாதர் – பாலாம்பிகை அம்மன் கோவில், சங்க கால பழமையான கோவிலாக கூறப்படுகிறது. சிறப்புமிக்க இக்கோவில், கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலாக, மேற்கு பகுதியில் உள்ளது. இக்கோவிலில், தினமும் காலை, மாலையில் பூஜை நடத்தப்படுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், படி உத்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதிகமானோர் வந்து செல்லும் இந்த கோவிலில், கழிப்பறை வசதி இல்லை. இதனால், ஆண்கள் அங்குள்ள ஒதுக்குப்புறமான திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். பெண்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மலை அடிவாரத்தில் உள்ள காலியிடம் அல்லது மலையின் மேல் கழிப்பறை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.