பதிவு செய்த நாள்
11
ஜன
2013
10:01
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் கோபியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, டிசம்பர், 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தேர் வெள்ளோட்டம், உட்பட பல விழாக்கள் நடந்தன. கோபி, அந்தியூர், ஈரோடு, சேலம், கோவை, மற்றும் கர்நாட மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்க, கடந்த 8ம்தேதி இரவு முதல் தடுப்பு வேலிக்குள் இடம் பிடித்து, வரிசையில் அமர்ந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு தேவையான உணவு, பொருட்களை உறவினர்கள் வழங்கினர். நேற்று முன்தினம், பத்து டன் விறகு அடுக்கி ,குண்டத்தில் தீ மூட்டப்பட்டது . அதிகாலை, காலை, 4.45 மணி தலைமை பூசாரி, குண்டத்தில் பூ, கனிகளை இறைத்து, 5.10 மணி அளவில் குண்டம் இறங்கி துவங்கி வைத்தார். கோவில் பூசாரிகள் இறங்கி பின், பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஒரு மணி நேரத்துக்கு குண்டத்தில் இருந்த கனல் சிறிது தணிந்ததால் பக்தர்கள் வேகமாக குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். காலை, 8.45 மணி வரை, நான்கு மணி நேரத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.