பதிவு செய்த நாள்
11
ஜன
2013
11:01
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விமானத்திற்காக, ஒரு கிலோ தங்கத்தை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று வழங்குகிறார். லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தலைமையில் புதிய கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்காகவும் இந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டசபை தேர்தலுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் குடும்பத்தினருடன் சென்று வழிப்பட்டார். அப்போது, "தே.மு.தி.க., வெற்றிக் கூட்டணியில் இடம் பெற வேண்டும்; அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை பலிக்கும் வகையில், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்றது; சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் பெற்றார். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்னும், தே.மு.தி.க., இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தன் தலைமையில் புதிய அணி அமைய வேண்டும்; 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், இன்று அதிகாலை , விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். தன் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்பதற்காக, ஆண்டாள் கோபுரத்தில் உள்ள விமானத்தை, தங்க விமானமாக உருவாக்குவதற்கு, ஒரு கிலோ தங்கத்தை, விஜயகாந்த் வழங்குகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -நமது நிருபர்-