பதிவு செய்த நாள்
25
பிப்
2026
11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அம்மன் கருவறைக்கு, தனியார் மூலம், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க திருவாச்சி உபயமாக வழங்கப்பட உள்ளது. கோவில் நிர்வாகம் ஆய்வு செய்தபின், கும்பாபிஷேகத்தின்போது நிறுவப்படும்.
இக்கோவில் கும்பாபிஷேகம், 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, 2021ல் அடுத்த கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2018 பிப்., 2ல் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தள்ளிபோனது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பும், கும்பாபிஷேக திருப்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புக்காக, நாமக்கல் மாவட்டம், பட்டணம் குவாரியில் இருந்து கற்கள் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. பின், சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கற்கள் தேர்வு செய்யப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
கோவிலின் திருப்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அனைத்து கோபுரங்களிலும் சேதமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கோவில் மண்டபங்களின் மேல்தளங்களில் உள்ள கூரை ஓடுகள், புதிதாக பதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மன், சுவாமி சன்னிதிகளின் மேல்பகுதியில், 2.50 லட்சம் கூரை ஓடுகள் பதிக்கப்பட்டன. கோவிலின் சமையல் அறையும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. யானை பார்வதி ஓய்வெடுக்கும் யானை மண்டபத்தில், புறாக்கள் வருவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கருவறையில் உள்ள திருவாச்சி அமைத்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதன் உறுதிதன்மை வலுவிழந்து வருவதால், புதிதாக அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி தனியார் ‘ஸ்பான்சர்’ மூலம், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க திருவாச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் உறுதிதன்மை, தரம், மதிப்பீடு குறித்து, கோவில் நிர்வாகம் தரப்பில் ஆய்வு செய்தபின், முறைபடி பெற்று கும்பாபிஷேகத்தின்போது அம்மன் கருவறையில் அமைக்கப்பட உள்ளது.