பதிவு செய்த நாள்
27
பிப்
2026
04:02
நரிக்குடி; நரிக்குடி கீழபுலியாண்டார்கோட்டையில் மார்நாடு கருப்பணசாமி கோயில் மாசிக்களரி திருவிழாவில் கொதிக்கும் நெய்யை கையால் அள்ளி பக்தர்கள் மீது பூசாரி தெளிக்கும் வினோத நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நரிக்குடி கீழபுலியாண்டார் கோட்டையில் 200 ஆண்டுகள் பழமையான மார்நாடு கருப்பணசாமி கோயில் மாசிக்களரி திருவிழா, ஒரு நாள் மட்டும் வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. ஊருக்குள் உள்ள மந்தையம்மன் கோயில் பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பலர் அக்னிசட்டி, 21 கண் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்தில் கருப்பணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின் அவ்வூரில் விளைந்த நெல், கடலை உள்ளிட்ட தானியங்களை நேர்த்திக் கடனாக செலுத்தினர். அதில் சிறிதளவு நெல்லை எடுத்து பெண்கள் உலக்கையால் உரலில் குத்தி, உமியை பிரித்து, அரிசியை மாவாக்கி, அதனை சலித்து, கருப்பட்டி பாகுவில் கலந்து, கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் வினோத நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. பூசாரி உள்ளிட்ட சாமியாடிகள் வெறும் கையால் அப்பத்தை எடுத்து பெட்டியில் போடுகின்றனர். பின் கொதிக்கும் நெய்யை அள்ளி பக்தர்கள் மீது தெளித்து, முகம், உடலில் தடவி விடுகின்றனர். இதனால் புண்ணியம் கிடைக்கும் என போட்டி போட்டு பக்தர்கள் உடலில் பூசிக் கொள்கின்றனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பேய் பிடித்த பெண்ணுக்கு சாட்டையால் அடித்து பேயை விரட்டினர். கரும்பு தொட்டில் கட்டி குழந்தைகளுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். சாமிக்கு பலியிடும் ஆட்டு ரத்தத்தை பூசாரி குடித்தார். பெரிய அரிவாளில் பூசாரி நின்று அருள் வாக்கு கேட்டு ஆசி பெறுகின்றனர்.உள்ளூர், வெளியூர், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு மாரநாடு கருப்பணசாமியை தரிசனம் செய்தனர்.