பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
திருவண்ணாமலை: உழவர்களின் நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சமேததரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன், சூரிய உதயத்தின்போது சூரிய பகவானுக்கும், நந்தியம் பெருமானுக்கும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் தங்க கொடி மரத்தின் அருகே உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபத்தில் அருகில் உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவானுக்குக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 108 வகையான பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஆப்பிள், வாழைப்பழம்,பழம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பழங்களும், அதிரசம், முருக்கு, சீடை, உள்ளிட்ட பலகாரம், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், உள்ளிட்ட காய்கறிகள், முல்லை, ரோஜா, மல்லி, உள்ளிட்ட மலர் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட, 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து சூரிய உதயத்தின் போது, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சூரியபகவானுக்கும், நந்திபகவானுக்கும் நேரடியாக வந்து காட்சி அளித்து அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிப்பட்டனர். பின்னர் ஸ்வாமி வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். அண்ணாமலையார் கோவிலில் உள்ள கோசாலையில் உள்ள மாடுகளை அலங்கரித்து, பொங்கல் படையலிட்டு மாடுகளுக்கு வழங்கப்பட்டன.
* திருவூடல் நிகழ்ச்சி: மனிதனின் இல்லற வாழ்வில் ஊடலுக்கு பின் கூடல் தத்துவத்தை விளக்கும் வகையில், அண்ணாமலையார் கோவிலில் நேற்று இரவு திருவூடல் உற்சவம் நடந்தது. கிரிவலப்பாதையில் பிருங்கி மகரிஷி என்ற முனிவர் பராசக்தி அம்மனை வழிபட மறுத்து, சிவனை மட்டும் நினைத்து தவம் இருந்து வந்தார். அவருக்கு காட்சி அளிக்க அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது பராசக்தி அம்மன், தன்னை வணங்காத பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி அளிக்க செல்ல கூடாது என, கூறினார். அதனால் ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்படும் நிகழ்ச்சி திருவண்ணாமலை திருவூடல் வீதியில் நடந்தது. அப்போது, உடன் சுந்தரமூர்த்தி நாயனார் தூது சென்று அண்ணாமலையாரையும், பராசக்தி அம்மனையும் சமாதானப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அண்ணாமலையாரும், பராசக்தி அம்மனும் சமாதானம் அடையாமல் ஊடல் ஏற்பட்டு அண்ணாமலையார் குமரக்கோவில் தெருவில் உள்ள குமரக்கோயிலில் இரவு சென்று தங்கி விட்டு இன்று அண்ணாமலையார் மட்டும் கிரிவலம் சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.
கிரிவலம் செல்லும்போது அண்ணாமலையார் அணிந்திருந்த நகையை கிரிவலப்பாதையில் கொள்ளையர்கள் பறித்து சென்று விடுவர், பின்னர் அண்ணாமலையார் நகை இல்லாமல் கோவிலுக்கு வருவார். அப்போது, பராசக்தி அம்மன், தம்மை மதிக்காத பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க சென்றததால் தான், இந்த நிகழ்ச்சி நடந்ததாக கூறி மறு கூடல் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் பிருங்கி மகிரிஷி தன் தவறால் தான் அண்ணாமலையார் நகையை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது என தன் தவறை உணர்ந்து அம்மனையும் சேர்த்து வழிபட்டார் என்று தல புராணங்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கிரிவலம் அண்ணாமலையாருக்கு வழி நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.