ஹாசன்: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின், சென்னகேசவ சுவாமி விக்ரகத்தில், சூரிய கதிர்கள் விழுந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவில் உள்ள சென்னகேசவ சுவாமி கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 21 அல்லது 22ம் தேதியன்று காலை, சூரிய ஒளி கோவிலுக்குள் நுழைந்து, மூலஸ்தானத்தில் குடிகொண்டுள்ள சென்னகேசவ சுவாமி விக்ரகத்தில் விழுவது வழக்கம். இந்த காட்சியை காண, பக்தர்கள் வருகை தருவர். சூரியன் சென்னகேசவ சுவாமியின் பாதங்களை தொட்டு வணங்குவதாக ஐதீகம். கடந்த 2021ல் சூரிய ஒளி, சென்னகேசவ சுவாமி விக்ரகத்தின் மீது படிந்தது. அதன்பின் நான்கு ஆண்டுகளாக சூரிய ஒளி படியவில்லை. மழை, மேகமூட்டமான வானிலை போன்ற காரணங்களால், இந்த அற்புத காட்சியை பக்தர்களால் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், பெருமளவில் பக்தர்கள் நேற்று காலை கோவிலுக்கு வந்திருந்தனர். காலை 6:15 மணிக்கு சூரிய ஒளி கோவிலின் நுழை வாசலை தாண்டி சென்று, மூலஸ்தானத்தில் இருந்த சென்னகேசவ சுவாமி விக்ரகத்தை தொட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை பார்த்து ஆனந்தித்தனர். சூரிய ஒளி சென்னகேசவ சுவாமியை தொட்ட பின், மூலஸ்தானம் மூடப்பட்டது. காலை 9:00 மணிக்கு பின், சுவாமிக்கு அர்ச்சகர் பாலாபிஷேகம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன.