பதிவு செய்த நாள்
18
ஜன
2013
01:01
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும், 20ம் தேதி அடைக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி உற்சவத்திற்காக, டிசம்பர், 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த, 14ம் தேதி, பொன்னம்பலமேட்டில் ஏற்றப்பட்ட மகர ஜோதியை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மறுநாள் முதல், படி பூஜை நடந்து வருகிறது. ஆனாலும், பக்தர்கள் கூட்டம், நேற்று வரை குறையவில்லை. பக்தர்கள், தேங்காயில் அடைத்து எடுத்து வரும் நெய்யால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது, இன்று காலை, 10: 30 மணியுடன் நிறுத்தப்படும். உச்சி கால பூஜையின் போது, பந்தள ராஜ குடும்பத்து பிரதிநிதி அசோகவர்மா முன்னிலையில், மூலவருக்கு சந்தன அபிஷேகம் செய்யப்படும்.அப்போது, கோவிலின் தலைமை அர்ச்சகர், கண்டரரு ராஜீவரு மற்றும் இதர அர்ச்சகர்களுக்கு, பண முடிப்பை, அசோக வர்மா வழங்குவார். இதையடுத்து, மகரஜோதி உற்சவ நிகழ்ச்சிகள் முடிந்து, வரும், 20ம் தேதி காலை, கோவில் நடை அடைக்கப்படும்.