மனிதர்கள் உள்நிலையில் உறுதியும் தெளிவும் பெறுவது முக்கியம் ;அமெரிக்காவில் சத்குரு பேச்சு
பதிவு செய்த நாள்
27
ஏப் 2026 05:04
தொண்டாமுத்தூர்: அமெரிக்காவில் நடந்த ஐ.ஐ.டி., 26 மாநாட்டில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் சில ஆண்டுகளிலேயே நிகழ்வதால், மனிதர்கள் உள்நிலையில், உறுதியும், தெளிவும் பெறுவது முன் எப்போதையும் விட முக்கியமானது என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இந்திய தொழில் நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி.,) 75 ஆண்டுகால சிறப்பை கொண்டாடும் வகையில், கடந்த ஏப்ரல் 22 முதல் 25ம் தேதி வரை, அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவின் லாங் பீச் கன்வர்ஷன்ஸ் சென்டரில் ஐ.ஐ.டி., 26 என்ற மாநாடு நடந்தது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் சத்குரு பேசுகையில்,"உங்களுக்குள் எரிச்சல், கொந்தளிப்பு, கோபம், பதற்றம் போன்றவை இல்லாமல், நீங்கள் இயல்பாகவே இனிமையான நிலையில் இருக்கும்போது, உங்கள் புத்திசாலித்தனம் நூறு மடங்கு மேம்படும். இந்தியாவை ஒரு நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு நாகரீகமாக பாருங்கள். ஒரு நாகரீகமாக, நம்மிடம் வேறு எங்கும் இல்லாத தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அறிவு சார் மற்றும் அறிவியல் தேடல்களுடன், வாழ்க்கையின் உள்நிலை பரிணாமங்களை ஆராயும் நீண்ட கால பாரம்பரியத்தை நம் பாரத நாகரீகம் கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள், வெறும் சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்துவிடக்கூடும். இதனால் மனிதர்கள் உள்நிலையில், உறுதியும், தெளிவும் பெறுவது முன்னெப்போதையும் விட முக்கியமானதாகும். இந்த கிரகத்திலேயே மனித இயந்திரம் தான் மிகவும் மேலான மற்றும் நுணுக்கமான தொழில்நுட்பம். எனவே, இந்த உள்நிலை தொழில்நுட்பத்துடன் நாம் ஆழமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் அதீத மாற்றங்கள் நிறைந்த இக்காலகட்டத்தை நாம் வெற்றிகரமாக கடக்க வேண்டுமானால், மனித நல்வாழ்வு, தெளிவு மற்றும் திறன் ஆகியவை மிகவும் அவசியமானவை,"என்றார்.
|