மானாமதுரை: மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் பாரம்பரிய பொங்கல் பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா சுவாமி கோயிலில் 118 ஆண்டுகளுக்கும் மேலாக குலாலர் சமூகத்தினர் சார்பில் பாரம்பரியமான வைகாசி பொங்கல் பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான திருவிழா நேற்று இரவு துவங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி ஓலை பெட்டிகளில் பூஜை சாமான்களையும், பூஜை பெட்டிகளையும் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை சென்றடைந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்ட பின்னர் இரவு கோயிலின் உள் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றனர். சோனையா சுவாமிக்கு சந்தன காப்பு செலுத்தி சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை குலாலர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.