பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
வாழப்பாடி: வாழப்பாடியில், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மற்றும் விஷ்ணு துர்க்கையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (23ம் தேதி) நடக்கிறது. வாழப்பாடி குமரவடிவேல் தெருவில், நூறாண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் வளாகத்தில், வீரபத்திரர் சுப்பிரமணியர் டிரஸ்ட் சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில், விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மற்றும் விஷ்ணு துர்க்கையம்மன் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (23ம் தேதி) அதிகாலை, 3 மணியவில் நடக்கிறது. விழாவையொட்டி, இன்று (22ம் தேதி) காலை, யாக பூஜை ஸோதானம், ஆசார்யாவர்ணம், மண்டபார்ச்சனை, ஷண்முக ஷடாசர ஹோமங்களும், தீபாரதனையும், பகல், 1 மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் கோபுர கலசங்கள் வைத்தல், சுவாமி விக்ரகங்களுக்கு கண் திறப்பும், மாலை, 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக தனபூஜை, மூலஸ்தான தீபம் ஏற்றுதல் பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நாளை அதிகாலை, 1 மணிக்கு, மேல் நான்காம் கால யாக பூஜை நாடி சந்தானம், மூலமந்திர மாலா மந்திர ஹோமங்களும், அதிகாலை, 3 மணிக்கு மேல் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கையம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வாழப்பாடி வீரபத்திரர் சுப்பிரமணியர் டிரஸ்ட் தலைவர் சுப்பராயன், செயலாளர் பாலமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.