பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா ஜனவரி, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 15 நாட்கள் விழா நடக்கிறது. அதில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா, 15 நாட்கள் நடக்கும். இந்த மலையில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்துள்ளது. பழனி முருகன் கோவிலில் எப்படி பங்குனி உத்திர தேர்திருவிழா சிறப்போ, அதே போல் சென்னிமலை முருகன் கோவிலில் தை பூச தேர்திருவிழா மிக சிறப்பு கொண்டாடப்படுகிறது. கடந்த 18ம் தேதி காலை கணபதி ஹோமம், இரவு கிராமசாந்தியும் நடந்தது. 19ம் தேதி கொடியேற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து, 20ம் தேதி இரவு பல்லக்கு சேவை நடந்தது. நேற்று இரவு மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. 23ம் இரவு, 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது. 24ம் தேதி வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்கு யானை வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. 25ம் தேதி மாலை, 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு, 8 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும், 26ம் தேதி இரவு ஏழு மணிக்கு சிறப்பு அபிஷேகம், எட்டு மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. 27ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை ஏழு மணிக்குள் மகர லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 28ம் தேதி மாலை, 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 29ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், 30ம் தேதி இரவு தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது. 31ம் தேதி சனி இரவு எட்டு மணிக்கு மகாதரிசனம் அன்று நடராஜப் பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று, சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஃபிப்ரவரி 1ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார்ரும் உதவி ஆணையருமான வில்வமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.