பதிவு செய்த நாள்
10
ஜூன்
2026
10:06
திருப்பூர்: ‘அடியார்களின் உள்ளத்தில் சிவ பெருமான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறார்’ என, சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம், திருவாசகம் குறித்து நேற்று பேசியதாவது:
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவிடைமருதுாரில், மகாலிங்க சுவாமி, தீர்த்த வாரி என்கிற தைப்பூச விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு, மாணிக்கவாசகர் காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்த்த வாரி விழா நடைபெற்றுவந்ததற்கு வரலாற்றுச்சான்றாக இது அமைகிறது.
திருவாரூரில், பெருமான், அடியார்களுக்கு ஞானத்தை வழங்கினார். திருவாரூரில்தான், சுந்தரர் பெருமானால், சைவர்களின் மூல காப்பியமான திருத்தொண்டர் தொகை எழுதப்பட்டது.
திருவாரூர், திருவிடை மருதுார், கடம்பூர், குற்றாலம் என பல இடங்களில் பெருமான் எழுந்தருளியுள்ளார். பல்வேறு கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், அவனை நினைந்து வழிபடுகின்ற அடியார்களின் உள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.