பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் முருகன் - சண்முகர் எதிர்சேவை நேற்று கோலாகலமாக நடந்தது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை அன்னக்கொடி ஏற்றப்பட்டது.தைப்பூச திருவிழாவில் சிறப்பு பெற்ற சண்முகர் எதிர்சேவை வைபவம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் கோ ரதம் திருவீதி உலா இடம்பெற்றது. ஐந்துபுளி மண்டபத்தில் இருந்து காலையில் சண்முகர் மேளதாளம் முழங்கிட எதிர்சேவை காட்சிக்காக அழைத்து வரப்பட்டார். மதியம் 12.45 மணிக்கு பண்பொழி மேலரதவீதியில் முருகன் - சண்முகர் எதிர்சேவை காட்சி நடந்தது. எதிர்சேவை காட்சியின்போது பக்தர்கள் கரகோஷம் எழுப்பியதுடன் பூக்களை தூவி ஆரவாரத்தை வெளிபடுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு முருகனாகவும், சண்முகராகவும் காட்சி தந்த சுவாமிகள் சிவன் கோயிலுக்கு புறப்பட்டனர். முருகர் - சண்முகர் எதிர்சேவை காட்சி வைபவத்தில் கோயில் உதவி ஆணையர் கார்த்திக், பண்பொழி டவுன் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், முன்னாள் திருப்பணி குழு தலைவர் அருணாசலம், பண்பொழி அதிமுக செயலாளர் பரமசிவன், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் மங்களவிநாயகம், 7ம் திருநாள் பண்பொழி தேவர் சமுதாயம் மண்டகபடிதாரர், சமுதாய நாட்டாண்மைகள் மற்றும் மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பண்பொழி, கரிசல்குடியிருப்பு, தேன்பொத்தை, நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, வாவாநகரம், செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு (26ம்தேதி) தேரோட்டம் நடக்கிறது.