சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2013 11:01
வள்ளியூர்: தெற்குகள்ளிகுளம் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தெற்குகள்ளிகுளத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு திப்பணிகளுக்கு பின்பு மகா கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை ஆகியன நடந்தது. மாலையில் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து புண்ணிய நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இரவு முதலாம் கால யாக பூஜை ஆரம்பித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் காலையில் தேவார திருமுறை பாராயணமும், இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜையும், இரவில் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 3ம் நாள் நிகழ்ச்சியாக காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடந்தது. காலை 9.45 மணிக்கு விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை நாகர்கோவில் ஒழுகினசேரி பாபு சிவாச்சாரியார் நடத்தினார். பின் மதியம் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் தெற்குகள்ளிகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்ம சமுதாயத்தினர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.