ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் பக்தர்களின் "அரோகரா கோஷத்துடன் தைப்பூச திருவிழா நடந்தது.ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை 6.30 மணிக்கு திருமஞ்சனம், விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. பக்தர்கள் சொக்கநாதர் கோயிலிலிருந்து பால்காவடி,பால்குடம் எடுத்து அரோகரா... கோஷத்துடன் பஜார் வழியாக கோயிலை அடைந்து. சுவாமிக்கு பாலபிஷேகம், அலங்கார அர்ச்சனை நடந்தது. செயல் அலுவலர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். வழிவிடு முருகன் கோயிலிலும் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முகவை ஊரணி வடகரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. லெஷ்மி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். மாலையில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரம்பரை டிஸ்டி ராஜசேகரன் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.