பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர். சண்முகநாத பெருமான் கோவிலில், ஜன.,18 அன்று கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. ஆறாம் திருவிழாவன்று தங்கரதத்திலும், எட்டாம் திருநாள் அன்று வெள்ளி ரதத்திலும், சுவாமி வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தைப்பூச விழாவான நேற்று குன்றக்குடி அருகே உள்ள, தேனாற்றங்கரையில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையடுத்து, வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாத பெருமான் எழுந்தருளினார். விழாவில், தேவகோட்டை, மணச்சை, கோட்டையூர், பள்ளத்தூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். டி.எஸ்.பி.,மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.