பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
சென்னிமலை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. ஸ்வாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்õமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. தேர்திருவிழா, மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகள் சென்னிமலை நகரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். அதனால் சென்னிமலை நகரில் நான்கு ராஜா வீதிகளிலும் எங்கு பார்த்தாலும் காவடி கூட்டமாக காணப்பட்டது. மலை மீதுள்ள முருகப்பெருமானை தரிசிக்க, படி வழியாகவும், தார்சலையிலும் மலை கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கார், பைக் போன்ற வாகனங்கள், மலை பாதையில் நான்காவது வளைவில் நிறுத்தப்பட்டன. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் ஐந்து மணி நேரமும், சிறப்பு தரிசனத்தில் இரண்டு மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலை கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே சென்னிமலை மலை மீதுள்ள முருகனை தரிசிக்க வருகை தரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றும் காவடிகூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வருகையை போலவே, கோவில் வருவாயும் பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்றைய தேரோட்டத்தில் அமைச்சர்கள் ராமலிங்கம், தோப்புவெங்கடாசலம், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், கோவில் தக்கார் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் பசவராஜன், கலெக்டர் சண்முகம், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், யூனியன் தலைவர் கருப்புசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்தி, ஈங்கூர் ஸ்ரீமகா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஈஸ்வரமூர்த்தி, யெங் இந்தியா பள்ளி தாளாளர் லட்சுமணன், ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள்ராஜன், ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சாந்தி சுப்பிரமணியம், ஆதித்தியா பள்ளி தாளாளர் கைலாசநாதர், அ.தி.மு.க., நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்றிய துணை செயலாளர் தம்பிதுரை, அக்னி நட்சத்திர குழு சுப்புசாமி, ஸ்ரீ முருகன் மங்கள வார விழா குழு சுரேகா செல்வகுமார், பிரபு, வேலுசாமி, வணிகர்கள் சங்கம் அன்பழகன், அம்மன் ராஜகோபால், விசைத்தறி சங்க தலைவர் சாமிநாதன், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.