பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
ப.வேலூர்: கபிலர்மலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் நடந்த தைப்பூசத் தேர்த்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ப.வேலூர் அடுத்த கபிலர்மலையில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தைப்பூசத் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 19ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 26ம் தேதி வரை, தினமும் காலை பல்லக்கு உற்சவம், இரவு ஸ்வாமி அன்னம், ரிஷபம், மயில், யானை, புஷ்பம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை, 5 மணிக்கு, ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். அன்று மாலை, 6 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், தனியரசு, அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் சுவாமிநாதன், வடகரையாத்தூர் பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி, கபிலக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கலாராணி மற்றும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தேர், மலையைச் சுற்றி, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவீதி உலா வந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.