திருவாலங்காடு; மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு பக்தர்கள் டிக்கெட் பெற, 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்வதால். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பரிகார பூஜையில், காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரையில், 8 குழுக்களாக 85 பக்தர்கள் வரையில் பூஜையில் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்தும் பூஜையில் பங்கேற்கின்றனர். ஒரு நபருக்கு 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக சனிக்கிழமை காலையில் கோவில் அலுவலகத்தில் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில், 3 மணி நேரம் வரையில் வரிசையில் காத்து நிற்க வேண்டி உள்ளதாக கூறுகின்றனர். எனவே ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்தது போல மீண்டும் கோவில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்ள் எதிர்பார்க்கின்றனர்.