பதிவு செய்த நாள்
28
ஜன
2013
03:01
சித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே என்றொரு பாடல் உண்டு. நம்மிடையே தோன்றி, வாழும்பொழுது ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, முக்தி அடைந்த பின்னும், பக்தர்களுக்கு திருவருள் புரிந்துகொண்டிருக்கும் சித்தர்களை வணங்குவது அந்த சிவபெருமானையே வணங்குவதற்கு சமமாகும். சித்தர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் என்பது கிடையாது. அவர்களது யோகத்திற்கும், தவத்திற்கும் இடையூறு இல்லாதிருப்பது ஒன்றே அவர்கள் நாடுவது. அவர்களுக்கு நோய் வந்தால்கூட அந்நோயின் வலியும் வேதனையும் அவர்களைத் தாக்காது. மக்களின் கஷ்டங்களையும் மனவேதனையையும் சித்தர்கள் உள்வாங்கிக் கொள்வதால் அந்தத் தாக்கம் அவர்களுக்கு நோயைத் தருகிறது. ஆனால் அதன் வேதனையும் வலியும் அவர்களுக்கு இருக்காது.
ரமண மகரிஷி, ராம்சுரத்குமார் போன்ற மாபெரும் மகான்களை நோய் பற்றினாலும் அவர்கள் அதை உணர்ந்தது இல்லை. நமது பாவங்களையும் சங்கடங்களையும் ஏற்றுக் கொண்டு நமக்கு நன்மை அளிக்கும் மகான்களும் சித்தர்களும் இன்றளவும் நம் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து வருகின்றனர். தெருவில் தனக்குள் பேசிக்கொண்டு, சீராக உடுத்திக்கொள்ளாமல் பைத்தியக்காரன்போல திரியும் சிலரில் சித்தர்களும் இருப்பார்கள். நமக்குத் தெரியாது. தெரியப்படுத்த வேண்டும் எனும் சித்தம் இருந்தால் அது நிகழ்ந்தே தீரும். பொதுவாக, சித்தர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். மக்களாகப் பார்த்து அவரது சக்தியைப் புரிந்துகொண்டு, சித்தர் என்று அறிந்து, அதைப் பற்றி பரவலாக மற்றவர்களிடம் கூறும்பொழுது மட்டுமே சித்தர்கள் அறியப்படுகிறார்கள். அதன்பின்னர், அவர்களின் மகத்துவம் பற்றி புரிந்து கொள்கிறார்கள்.
சில சித்தர்களின் ஆயுட்காலம் இயற்கையாக முடிந்த பின் அவர்களுக்கு சமாதி எழுப்பப்படுகிறது. இச்சமாதி அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகின்றது. சில சித்தர் பெருமான்கள் உயிரோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளிறங்கி அப்படியே சமாதி ஆகின்றார்கள். இதற்கு ஜீவசமாதி என்று பெயர். இவர்களுக்கு தாங்கள் எந்த நாளில், நேரத்தில், எந்த இடத்தில் ஜீவசமாதி ஆகப் போகிறோம் என்பது முன்பே தெரியும். அனைத்து சித்தர்களுக்குமே அவர்களது முடிவுக்காலம் முன் கூட்டியே தெரிந்திருக்கும். பின்னர் நிகழ இருப்பதை முன்னரே அறிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவர்தான் வண்ணாரப் பரதேசி. இவர் வள்ளலார் ராமலிங்க அடிகளின் சமகாலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில் ஒரு அடர்ந்த காடு போன்ற இடத்தில் வாழ்ந்தவர். அதுவும் சாதாரண காடு அல்ல. ஏகப்பட்ட வில்வ மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த வில்வக்காடு! வில்வத்திற்கும் ஈஸ்வரனுக்கும் தொடர்பு உண்டல்லவா! இவர் அந்தக் காட்டின் நடுவே தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரது கை, கால், மற்றும் அனைத்து உறுப்புகளும் தனித்தனியே கிடப்பதைக் கண்ட மாடு மேய்க்கும் சிறுவர்கள் பயந்துபோய், ஊர் மக்களை அழைத்து வந்தனர்.
அவர்கள் வருவதற்குள் வண்ணாரப் பரதேசி சித்தர், தன் யோக நிலையில் இருந்து மாறி பழையபடி அவரது உருவத்தில் காணப்பட்டார். வியந்துபோன மக்களுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது- அவர் சித்தர் என்று அந்த வில்வக்காடுதான் பின்னர் வில்லியநல்லூர் என மாறி, நாளடைவில் வில்லியனூர் என மருவியுள்ளது. அவரது சக்தியையும், ஆற்றல் பற்றியும் புரிந்துகொண்ட மக்கள் அவரைத் தேடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அங்கே மீன் விற்பனை செய்பவர்கள் இவரை வணங்கிய பிறகுதான் மீன் விற்பனைக்குச் செல்வார்களாம். சித்தரது கையால், பூமியில் இருந்து மண்ணை எடுத்துக்கொடுத்து அனுப்பினால் மீன்கள் அனைத்தும் வெகுவிரைவில் விற்பனையாகிவிடுமாம்! பக்தர்கள் கேட்டதை வழங்கும் சக்தி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகள் மக்களுக்கு அருள் வழங்கிய இந்த சித்தரின் ஆயுட்காலம் முடிந்ததும், அன்றைய பக்தர்கள் அவருக்கு சமாதி கட்டினார்கள். சிறிய ஓலைக் குடிலுக்குள் இருந்த இந்த மகானின் சமாதிக்கு, பின்னாளில் கல் கட்டடம் கட்டி சிறப்பு செய்தனர். இவரது சமாதிக்குமேல் சிறிய அழகிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு எதிர்பக்கமாக மிக அழகிய, சிறிய நந்தியும் காணப்படுகிறது. சித்தர் பெருமானின் வலது, இடது பக்கங்களில் விநாயகரும், முருகரும் காட்சியளிக்கின்றனர்.
இச்சித்தர் சமாதியாகியுள்ள பகுதி, புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரை அடுத்துள்ள ஓதியம்பட்டு ஆகும், இங்குள்ள மக்களின் அரிய முயற்சியால் சித்தரது சமாதிக் கோவில் சற்றும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள மில்களில் பணிபுரியும் பெண்கள், வேலைக்குப் போகும் முன்பு இச்சமாதிக்கு வந்து தீபம் ஏற்றிவிட்டுச் செல்கிறார்கள். தாங்கள் கேட்பதெல்லாம் கிடைப்பதாகவும், நினைப்பதெல்லாமே நிறைவேறுவதாகவும் கூறுகின்றனர் இந்த பக்தைகள்.
மகான் வண்ணாரப் பரதேசி ஆலயம் மிக அமைதியாக உள்ளது. இங்கே தினமும் தீபம் ஏற்றி வணங்கவரும் பெண்கள் அநேகம் சித்தர்மீது மாறாத பக்திகொண்டு இவரைத் துதித்து வணங்கி வருகின்றனர் அவரது பக்தர்கள். கோவிலின் முன்பக்கம் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன. சமீபத்தில் வீசிய தானே புயலில் புதுச்சேரியில் பல மரங்கள் விழுந்து சரிந்தபோதும், இங்குள்ள மரங்களில் ஒன்றுகூட விழவில்லை. ஒரு கிளை கூட சரியவில்லை. அதுபோல சுவாமிகளுக்கு ஏற்றிய தீபம்கூட அணையவில்லையாம். அது இந்த மகானின் மகத்துவத்தால் தான் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள் மக்கள். சமாதியைச் சுற்றிலும் நிறைய பாம்புகள் இருக்குமாம். இதுவரை ஒரு பாம்புகூட யாரையும் தீண்டியதில்லையாம். பொதுமக்கள் உதவியோடும் அரசு வழங்கிய நிதியோடும் ஓரளவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை, இன்னும் மேம்படுத்த வேண்டுமென இங்கு வரும் பக்தர்கள் பலரும் விரும்புகின்றனர். மகிமைமிக்க இதுபோன்ற சித்தரின் சமாதிக் கோவில்களுக்கு நிதியுதவி செய்வது ஒரு வகையில் புனிதத் தொண்டாகும். இறைவனின் அருளுக்கு மட்டுமல்ல; இறைத்தொண்டர்கள், சித்தர்களின் அருளுக்குப் பாத்திரமாவதும்கூட பெரும் பேறு. வண்ணாரப் பரதேசிச் சித்தரின் சமாதிக் கோவிலை தரிசித்து, நாமும் பேறு பெற்றவர்களாகத் திகழலாமே!