கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மஹாராஜகடை பாலசுப்பிரமணி ஸ்வாமி கோவிலில், நடந்த தைப்பூச விழாவில், 10 வயது சிறுவன் முதுகில் அலகு குத்தி அந்தந்தரத்தில் தொங்கி ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்தான். இதையொட்டி, கடந்த, 26ம் தேதி அங்குரார்பணம், கலசஸ்தாபனம், கொடியயேற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் தைப்பூசத்தையொட்டி காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மஹாராஜகடையை சேர்ந்த ஆஞ்சிநாதன், 10 மற்றும் அருணாசலம், 11 ஆகிய இரண்டு சிறுவர்கள் முதுகில் அலகு குத்தி அந்தந்தரத்தில் தொங்கியபடி ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று நவக்கிரக பூஜை, இடும்பன் பூஜை மற்றும் வாண வேடிக்கை நடந்தது.