பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழாவில் அம்பாளுக்காக நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய வரலாறு அரங்கேற்றம் நடந்தது. கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் 4வது நாளான கடந்த 21ம் தேதி "திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.நடராஜர் ஆனந்த நடனம் காந்திமதி அம்பாள் சன்னதியை அடுத்த சவுந்திரசபையில் நடராஜர் ஆனந்த திருநடன காட்சி நடந்தது. அதாவது மார்கழி திருவாதிரையன்று பஞ்ச சபைகளிலும், அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜர் தாண்டவ நடனம் நடக்கிறது. ஆனால் அந்த தாண்டவம் உக்கிரமாக இருந்ததாகவும், அம்பாளுக்காக தை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடியதாகவும் வரலாறு.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலை அடுத்த காந்திமதிஅம்பாள் சன்னதியை அடுத்த சவுந்தரசபைக்கு நேற்று காலை அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் இருந்து நடராஜப் பெருமான் எழுந்தருளி அம்பாளுக்காக ஆனந்த நடனம் ஆடினார். சுவாமியின் நடனத்தில் அம்பாள் மெய்சிலிர்த்து, தன்னையே மறந்து இருந்த போது, சுவாமி திடீரென மாயமானர். தொடர்ந்து சுவாமியை தேடிய அம்பாள், கோயில் கோபுரம், ஸ்தல விருட்சம், தீர்த்தம் ஆகிய இடங்களில் தேடினார். பின்னர் ரதவீதி வழியாக தேடிவந்த போது, சந்திவிநாயகர் சன்னதி முன் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுத்தார். சுவாமி, அம்பாள் காட்சியை தொடர்ந்து தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சவுந்தரசபைக்கு எழுந்தருளி, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனந்த நடனத்தின் போது மேளம், வேதபாராயணம், திருமுறை பாடப்பட்டன. பதஞ்சலிமுனிவர், அகஸ்தியர், வியாக்ரகபாதர் தரிசனம் செய்தனர்.இன்று (29ம் தேதி) இரவு நெல்லையப்பர் வெளித் தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது.