செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், பாலாற்றங்கரையில் கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெறும். நடப்பாண்டுக்கான திருவிழா, கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் ஊர்வலமாக சென்றார். பின் நடந்த தீ மிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அச்சிறுபாக்கம் பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை மூலவர் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.