தொல்காப்பியத்தில் முருகன் வழிபாடு; மலைகளில் சிறந்தது திருத்தணிகை
பதிவு செய்த நாள்
06
ஆக 2026 12:08
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் நுாலில், முருகன் வழிபாடுகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. சங்க கால புலவராக 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நக்கீரர் என்னும் நல்லிசை புலவர் பெருமான், முருகனைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். திருத்தணியைப் பற்றி பாம்பன், குருதாசர் சுவாமிகள், வடலுார் ராமலிங்க அடிகளார், கந்தப்ப தேசிகர், கச்சியப்ப முனிவர், சிவாச்சாரியார்கள் என பலரும் போற்றி பாடினர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழாவில், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முருகனை வழிபட்டு செல்கின்றனர். அதே போல், ஆண்டுதோறும் டிச., 31ம் தேதி திருப்படித் திருவிழாவை ஒட்டி, முருக பக்தர்கள் திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டும், ஒவ்வொரு படியாக வணங்கி ஏறிச் சென்றும் முருகனை தரிசிக்கின்றனர். திருக்கோவில் அமைப்பு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் அடையாளமாக திகழ்கிறது. படிகளின் உயரம் அளவாக இருப்பதால், பக்தர்கள் ஏறுவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. பக்தர்கள் திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டே மலைப்படிகளில் ஏறுவது எளிதாக இருக்கும். பாதி மலைப்படிகளில் ஒரு சுனை உள்ளது. அது பிரம்ம சுனையாகும். இதை தரிசித்து விட்டு, அங்குள்ள விநாயகர், பிரம்ம லிங்கேஸ்வரர் இருவரையும் வணங்கி, மலை உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கு, தேர் வீதியாக கிழக்கு வெளிப்பிரகாரம் உள்ளது. இப்பிரகாரத்தின் துவக்கத்தில் கர்ப்பூர கொப்பை, சுவாமி சன்னிதிக்கு நேராக உள்ளது. கிருத்திகை போன்ற சிறப்பு நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவதால், அந்த பிரார்த்தனை கர்ப்பூர கட்டிகள் இதில் எரியும். தேர் வீதியை வலமாக வந்தால், தெற்கு வாயிலுக்கு நேராக தென்புறத்தில் இந்திர நலச்சுனை தெரியும். இதன் தீர்த்தம் தான் இன்றும் முருகனுக்கு தனிச்சிறப்பாக பயன்படுகிறது. இதில் யாரும் இறங்குதல் கூடாது. நின்ற இடத்திலேயே தரிசித்து சென்றால், தென்மேற்கு மூலையில் வாகன மண்டபம் உள்ளது. விழாக்காலங்களில் முருகன் இம்மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருவார். அடுத்து, மேற்கு பிரகாரத்தில் மேல்திருத்தணிக்கு செல்லும் மலைப்படிகள் உள்ளன. இப்படிகள் தொடங்கும் இடத்தில் செங்கழுநீர் விநாயகர் கோவில் உள்ளது. வடக்கு, கிழக்கு, மேற்கு தேர் வீதிகளில் இருந்து பார்த்தால், நந்தியாறு, திருத்தணி நகர் மற்றும் அழகிய காட்சிகளை காணலாம். வடக்கு பிரகார முடிவில் வடகிழக்கு மூலைக்கு அருகில், நவாப் வாத்திய மண்டபத்தில் நாள்தோறும் பூஜை வேலைகளில் மங்கள வாத்தியங்கள் வாசிப்பர். இந்து, முஸ்லிம் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்றாகும். தேர் வீதி பிரகாரத்தில் இருந்து கிழக்கு வாயிலாகவோ, மேற்கு வாயிலாகவோ சில படிகள் ஏறினால், முருகன் சன்னிதியை அடையலாம். ஐராவதம் ஐராவதம் யானை முருகனை நோக்கி நிற்காமல் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறது. அதற்கு காரணம், இந்திரனுக்கு உரிய வாகனமான ஐராவதம் எனும் யானை, தெய்வானையின் திருமணத்தின் போது சீதனப்பொருளாக இந்திரனால் கொடுக்கப்பட்டது. ஐராவதம் யானை தன்னை விட்டு பிரியவே, இந்திரனின் செல்வம் குறைந்தது. அக்குறை நீங்க, இந்திரன் இத்திருத்தலத்தில் செங்கழுநீர் பூவால் முருக கடவுளை வழிபட்டார். வழிபாட்டிற்காக ஐராவதத்தை கொண்டு செல்ல, இந்திரனுக்கு முருகன் காட்சியளித்தார். ஆயினும், சீதனமாகத் தந்த பொருளை திரும்ப பெற்றுக் கொள்வது முறையல்ல என்று இந்திரன் தயங்கினான். ஐராவதமும் முருகனுக்கு ஊர்தியாக இருத்தலையே பெரிதும் விரும்பியது. ‘ஐராவதம் இங்கு தங்கள் சன்னிதியிலேயே தங்கியிருக்கட்டும். ஆனால், கிழக்கில் உள்ள என் உலகை நோக்கி கொண்டிருந்தால் போதும்; என் நாடும், செல்வமும் வளம் குன்றாமல் இருக்கும்’ என்று முருகனிடம் வேண்டினார். அதற்கு முருகனும் சரியென்று கூறி அருள்பாலித்தார். ருத்ராட்சத்திலான உற்சவர் மண்டபம் வடகிழக்கு மூலையின் அருகே, ருத்ராட்ச விமானத்தில் முதன்மையான பெரிய உற்சவ மூர்த்தி வீற்றிருக்கிறார். விமானத்தின் மேல்பாகம் முழுதும் ருத்ராட்ச மணிகளால் அமைந்துள்ளது. இதை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பரிகாரத்தின் வடபாகத்தில் சண்முகம் மூர்த்தி உற்சவர் உள்ளார். மாலையில் பிரதோஷ வேலைகளில் 6:30 மணிக்கு தீப ஆராதனை நடக்கும். பின்னர் தான் மூலவருக்கு அபிஷேகம், பூஜை, மாலை தீபாராதனை நடக்கும். சண்முக சுவாமிக்கு கிழக்கே ஆபத் சகாய விநாயக பெருமான் உள்ளார். இவருக்கு அருகில் அருணகிரிநாதர் தனி விமானத்தில் உள்ளார். அவருக்கு தெற்கே வீரபத்ரரும், நவ கிரகர்களும் உள்ளனர். வீரபாகு தேவருக்கு தெற்கே சூரிய மூர்த்தி உள்ளார். இவருக்கு முதலில் பூஜைகள் செய்த பின், உள்ளே உள்ள சன்னிதிகளுக்கு பூஜைகள் செய்யப்படும். திருத்தணிகை மலை இத்திருத்தலத்தில் முருகன், மலை மீது எழுந்தருளியுள்ளார். ஒரு தனி மரத்தின் சிகரத்து உச்சியில் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களில் மலைத்தொடர்ச்சிகள் பரவி படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால், ‘பச்சரிசி மலை’ என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால், ‘பிண்ணாக்கு மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப்பொய்கை திருக்குளம் என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் உள்ளது. இதில் யாத்ரீகர்களும், பக்தர்களும் நீராடிவிட்டு, திருநீறு பூசிக்கொண்டு பக்தி பாடல்களை பாடி, மலைப்படிகள் வழியாக செல்கின்றனர். இங்கு சூரசம்ஹாரம் இல்லை: முருகன் திருச்செந்துாரில் அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில், முருக தலங்களில் கந்த சஷ்டியின் போது, சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. இதற்காக, 1,000 கிலோ பூக்களை வெளி மாநிலங்களில் இருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டு, பலவிதமான பூக்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
|