தஞ்சை பெரிய கோயிலுக்கு புகழாரம் சூட்டும் ஆயிரம் ரூபாய் நாணயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2013 11:02
திருநெல்வேலி: மத்திய அரசு சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு மற்றும் மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவை போற்றும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மி.மீ விட்டத்தை கொண்டது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 80 சதவீதம் வெள்ளியும், 20 சதவீதம் செம்பும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபுறத்தில் ஆயிரம் என்ற எண்ணும், நான்முக சிங்கமும், மறுபுறத்தில் தஞ்சை பெரிய கோயிலின் படமும், ராஜராஜ சோழனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ரசித்து வியக்கும் வகையில் இந்த நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாணய சேகரிப்பில் ஆர்வம் கொண்ட செங்கோட்டை அருகே தெற்கு மேடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக ஆல்பர்ட் செல்வின் கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக ஆயிரம் ரூபாய், 5 ரூபாய்க்கான நாணயங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டன. இதில் 5 ரூபாய் நாணயங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய்க்கான நாணயம் பணம் செலுத்தி முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பெறத் தக்க வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நாணய வரலாற்றில் அதிக பண மதிப்பில் நாணயம் வெளி வருவது இதுவே முதன் முறையாகும். இந்த அரிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நாணயத்தை உரிய முறையில் பாதுகாப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆயிரம் ரூபாய் நாணயத்தை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் அன்னை தெரசா 10 ரூபாய், ரவீந்திரநாத் தாகூர் 150 ரூபாய், சாணக்யா 150 ரூபாய் நாணயங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.