திருநெல்வேலி: நெல்லை டவுன் லெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. நெல்லை டவுன் மேல மாட வீதியில் அமைந்துள்ள லெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேக விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. 2 நாட்கள் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. உத்திரம் நட்சத்திர தினத்தில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கும்ப பூஜை, புண்ணியாகவாஜனம், அக்னி பிரதிஷ்டை, பஞ்சசுக்த ஹோமம் நடந்தது. தொடர்ந்து சகல திரவியங்களால் திருமஞ்சன அபிஷேகம் மற்றும் திருவாதாரணம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத லெட்சுமி நரசிங்கப் பெருமாள், பரிவாரத் தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறை மற்றும் தீர்த்த கோஷ்டி நடந்தது. இரவு ஸ்ரீனிவாசப் பெருமாள், மூலவர் லெட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. தொடர்ந்து சாயாரட்சை மற்றும் பெருமாள் உள் பிரகாரம் புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.