பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் "போலி வெள்ளி உருவங்களால் பக்தர்கள் ஏமாறாமல் இருக்க கேரள மாநிலம் குருவாயூர் கோயில் முறையை சங்கரநாராயணசுவாமி கோயில் நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் பக்தர்கள் கை, கால், கண், பாம்பு போன்ற உருவங்களை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட உருவங்கள் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கம் காரணமாக கோயில் நிர்வாகம் வெள்ளி உருவங்கள் விற்பனையை நிறுத்தி விட்டது. இதனால் கோயில் பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் வெள்ளி போன்று வெள்ளை நிறத்தில் உள்ள "போலி வெள்ளி உருவங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உருவங்கள் 10 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டு சுமார் 30 மடங்கு லாபத்தில் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் ஏமாற்றப்படுவதுடன் போலி வெள்ளி உருவ வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். மேலும் பக்தர்களால் கோயிலில் போடப்படும் போலி வெள்ளி உருவங்களை என்ன செய்வது என்பது தெரியாமல் கோயில் நிர்வாகமும் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவது போல் சங்கரநாராயணசுவாமி கோயிலிலும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தால் உருவ வியாபாரிகளின் கொள்ளை தடுக்கப்பட்டு கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறும் போது, கேரள மாநிலம் குருவாயூர் கோயிலிலும் பக்தர்கள் நேர்த்திகடனாக உருவங்களை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் குருவாயூரப்பன் சன்னதி முன்பு கோயில் ஊழியர் ஒருவர் உண்மையான வெள்ளியில் தயாரிக்கப்பட்ட கை, கால், கண் போன்ற உருவங்களை(ஒவ்வொன்றும் சுமார் 500 கிராம் எடையில் இருக்கும்) ஒரு தாம்பாளத்தில் வைத்திருப்பார். நேர்த்திகடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயில் ஊழியரிடம் விரும்பும் உருவத்தை பெற்று அருகில் உள்ள மற்றொரு தாம்பாளத்தில் வைத்தால் நேர்த்தி கடன் செலுத்தியதாக ஆகி விடும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக கோயில் ஊழியர் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் உண்டியலில் பக்தர்கள் விரும்பும் பணத்தை காணிக்கையாக செலுத்தலாம். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் உண்டியலில் பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த முறையை கோயில் நிர்வாகம் பின்பற்றுவதன் மூலம் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாறுவது தடுக்கப்படுவதுடன், கோயில் வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது என்று கூறினார். இதுகுறித்து கோயில் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.