பதிவு செய்த நாள்
02
பிப்
2013
04:02
இயற்கையை நேசிப்பதில், சுவாசிப்பதில் கிராமத்து மக்களை மிஞ்ச ஆளில்லை. இவர்கள் நம்புவதெல்லாம் ஊரை கட்டிக்காக்கும் காவல் தெய்வங்களைத்தான். வெளுத்ததெல்லாம் பால் எனும் வெள்ளந்தி மனிதர்கள் வசிப்பது; சூது, வாது இல்லா சுறுசுறுப்பு மனிதர்கள் குடிகொள்வது கிராமங்களில் மட்டுமே. விஞ்ஞானம் சொன்னாலும் ஏற்காத கிராமத்து ஞானிகள், அஞ்ஞானமென்றால் ஆராய்ச்சியின்றி அப்படியே ஏற்கின்றனர் வழி வழியாக. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலிருந்து 3 கி.மீ.,ல் உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில், விசித்திரமாய் மேற்கு நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் குதிரையில் வெங்கலமுடைய அய்யனார், காளியும், பஞ்சம் வராமல் காப்பதாக நம்புகின்றனர். பொதுவாக, அய்யனார், காளி தெய்வங்கள் குதிரையுடன் கிழக்கு நோக்கியே இருக்கும். இங்குள்ள அய்யனார் மேற்கு பார்த்து இருப்பதே விசேஷமாக கருதுகின்றனர். இதற்கு இக்கிராமத்தினர் கூறும் காரணத்தை விவாதமின்றி அப்படியே ஏற்கச்செய்கிறது. விடிவதற்குள் யார் முதலில் ராமேஸ்வரம் சென்று திரும்புவது என்ற போட்டி, அய்யனார் குதிரைகளுக்குள் ஏற்பட்டதாம். இதில் மற்ற குதிரைகள் எல்லாம் தாமதமாக செல்ல, விடிவதற்குள் வேலாங்குளம் அய்யனார் குதிரை மட்டும் ராமேஸ்வரம் சென்று திரும்பியதாம். மற்ற குதிரைகள் எல்லாம் ராமேஸ்வரம் செல்வதற்குள் விடிந்து விட கிழக்கு நோக்கி இருக்கிறது.வேலாங்குளம் அய்யனார் குதிரை மட்டும் மேற்கு நோக்கி இருப்பதாக காரணக்கதை சொல்கின்றனர். இதனால் தானோ என்னவோ, வைகையை நம்பி விவசாயம் செய்யும் அக்கம் பக்கத்து கிராமங்கள் எல்லாம் பஞ்சத்தில் தத்தளித்து, தண்ணீர் தாகத்தோடு நெற்பயிர்கள் கருகிக் கொண்டிருக்கிறது. ஆனால், வேலாங்குளத்தில் மட்டும், வற்றாமல் கிணற்று தண்ணீர் ஊற்றெடுக்க, இதுவரை பஞ்சம் என்று வந்ததில்லை. இதற்கு காரணம் மேற்கு நோக்கி பார்த்திருக்கும் வெங்கலமுடைய அய்யனார், பத்திரகாளியின் அருளாசி தான், பஞ்சமின்றி விளைகிறது. மாரநாடு கால்வாய் கரையில் வீற்றுள்ள அய்யனார் கோயிலை கடக்கும் போதெல்லாம், காலணிகளை கழட்டி கையில் வைத்து, "பஞ்சம் போக்கும் அய்யனாரே தஞ்சம் என நடக்கின்றனர் பயபக்தியோடு.