பதிவு செய்த நாள்
04
பிப்
2013
10:02
தமிழகம் முழுக்க உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்களில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 2,000 காலி பணியிடங்கள் உள்ளதால், கோவில் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழகம் முழுக்க, 36,500 கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், 10 லட்சத்திற்கு மேல் மாத வருமானம் வருகிறது. தமிழகத்தில் உள்ள மிக முக்கிய கோவில்கள், இப்பட்டியலில் உள்ளது. வருமானம் அதிகம் வருவதால், இந்து சமய அறநிலையத் துறையும் இக்கோவில் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும், ஆனால், முதுநிலை கோவில்களில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 2,000 காலி பணிஇடங்கள் உள்ளன. இதனால், கோவில் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தல வரலாற்று புத்தகங்கள் வழங்குதல், கோவில் பிரசாதங்கள் வழங்குதல், மேலும், காணிக்கை சீட்டுகள் வழங்குதல், வரவு செலவுகளை கவனிப்பது என, பல்வேறு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பணியிடங்கள் காலியாகவுள்ளன.இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், தனபால் கூறுகையில், ""இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண முயற்சித்து வருகிறோம். கூடிய விரைவில், சமூக தீர்வு ஏற்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பப்படும், என்றார்.
- நமது நிருபர் -