பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.
ஞான கவுரி: ஒரு முறை சக்திதேவி,உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலை உயர்ந்தது என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகனம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள்., நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, கவுரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலில் பாதி பாகத்தை தந்த ஈசன், அவனை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கவுரி என்ப போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கவுரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.
அமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கவுரிக்கு, அமிர்த கவுரி என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பாள். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.
சுமித்ரா கவுரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குக் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, அன்பாயி சினேகவல்லி என்ப போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கவுரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.
சம்பத் கவுரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கவுரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் மகாமங்கள கவுரி, சம்பத் கவுரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.
யோக கவுரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கவுரி திகழ்கிறாள். இவளையே ஸ்ரீ யோக கவுரி என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் சித்த யோகேஸ்வரி பீடம் என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கவுரி என்று அழைக்கின்றனர். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமாலாம்பிகை யோக கவுரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ராகசியங்கள், யோக வித்தை எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கவுரி யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.
வஜ்ர ச்ருங்கல கவுரி: உறதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கவுரிதேவி வஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால். வஜ்ர ச்ருங்கல கவுரி என்ப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸித்தி விநாயகர்.
ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கவுரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவைள வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கவுரி வீற்றிருக்கிறாள்.
சுயம் கவுரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கவுரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான், ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.
கஜ கவுரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள், ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கவுரி காட்சியளிக்கிறாள்.
கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்த போதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கவுரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.
சத்யவீர கவுரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கவுரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள்-ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.
வரதான கவுரி: கொடை வள்ளல்கள் கரத்தில் ஸ்ரீவரதான கவுரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கவுரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீசுரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி-வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.
சுவர்ண கவுரி: ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது, தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும்,பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி-வளர்பிறை திருதியை நாளில் கடைபிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகிறார்கள்.
சாம்ராஜ்ய மஹாகவுரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.
அசோக கவுரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கவுரி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை-வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை, இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.
விஸ்வபுஜா மகாகவுரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திரதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.