பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில், காணிக்கையாக செலுத்தப்படும், "முடியை, மொத்தமாக விற்பனை செய்தால், இந்து சமய அறநிலையத்துறைக்கு, கோடிக்கணக்கில் வருவாய் வாய்ப்புள்ளது. ஒரு சில கோவில்களில் மட்டுமே உள்ள விற்பனை திட்டத்தை, அனைத்து கோவில்களுக்கும் விரிவாக்கினால், அதிக வருவாய் கிடைக்கும். பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கும், குழந்தைகளுக்கு காது குத்தி, மொட்டை அடிப்பதற்கும், கோவில்களுக்கு செல்வது வழக்கம். தமிழகத்தில், 10 லட்ச ரூபாய்க்கு மேல், அதிக வருவாய் வரும் கோவில்களில், ஆயிரக்கணக்கானோர்,ஒவ்வொரு மாதமும் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். குறிப்பிட்ட, சிறப்பு நாட்களில், ஆயிரக்கணக்கானோர் கோவில்களில் குவிவர். இதனால், முக்கிய கோவில்களில், மாதத்திற்கு, 5 டன் முடி காணிக்கை கிடைப்பது வழக்கம். பக்தர்களை செலுத்தும் காணிக்கை முடியை, நான்கு வகையாக பிரித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பர்.சந்தை அதிகரிப்பு தற்போது, வெளிநாடுகளில் முடிகளை வாங்கும் சந்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், இந்தியர்களின் முடிகளை வாங்கி, "செயற்கை முடி தயாரிப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், கோவில்களில் குவியும் காணிக்கை முடி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, ஏலமுறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கிடைத்த காணிக்கை முடி, 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட ஆறுபடை முருகன் கோவில்கள் மற்றும் முதுநிலை கோவில்களில், காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடி, அந்தந்த கோவில் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் குழு ஆனால், இரண்டாம் நிலை கோவில்களில் காணிக்கையாக அளிக்கப்படும் முடி, முக்கியத்துவம் பெறாமல் குப்பையில் கொட்டப்படுகிறது. அவ்வாறு பல கோவில்களில் கொட்டப்படும், காணிக்கை முடியை, மொத்தமாக சேகரித்து விற்பனை செய்யும் பணியில், பல தனியார் குழுக்கள், தமிழகம் முழுக்க செயல்பட்டுக் கொண்டிக்கின்றன. காணிக்கை முடியைக் கொண்டு, தனியார் லாபம் அடைவதைத் தவிர்க்க, அனைத்து கோவில்களில் இருந்தும், கணிக்கை முடியை சேகரிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றை, மொத்தமாக பெற்று, பொது ஏலத்திற்கு விட வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாதத்திற்கு, 10 டன் வரை, காணிக்கை முடி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. தமிழகம் முழுக்க சேகரித்தால், வருடத்திற்கு, குறைந்தது, 2000 டன் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இது வெறும் முடி சம்மந்தப்பட்ட பிரச்னை தானே என, அறநிலையத்துறை அமைதியாக இருந்து விடாமல், முயற்சி செய்தால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன; இருந்தாலும், அரசுக்கு இது குறித்து, பரிந்துரை அனுப்புவோம் என்றனர்.