திருத்தணி முருகன் கோவில் பிரசாதத்தை ‘பார்சல்’ செய்து தர பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2026 10:09
திருத்தணி: ‘முருகன் கோவிலில் விற்கப்படும் புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை, ‘பார்சல்’ செய்து கொடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இயங்கி வரும் பிரசாத விற்பனை நிலையத்தில், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, மிளகு வடை, தேன்குழல், முறுக்கு போன்ற பிரசாதங்கள் தயாரித்து, பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. பிரசாத நிலையத்தை பராமரிக்கும் கோவில் நிர்வாகம், ஆண்டுக்கு ஒரு முறை தனிநபர்களுக்கு ஏலம் விடுகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன் வரை, பிரசாதங்களை தனிநபர் ஒருவர் விற்பனை செய்து வந்தார். ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், தற்போது கோவில் நிர்வாகத்தினரே பிரசாதங்களை விற்பனை செய்து வருகின்றனர். தனிநபர் விற்பனை செய்தபோது, பிரசாதங்களை ‘பார்சல்’ செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்தனர். தற்போது, கோவில் நிர்வாகம் புளியோதரை, சர்க்கரை பொங்கல் மட்டுமே விற்பனை செய்கின்றனர். அவற்றையும், ‘தொன்னை’யில் வைத்து கொடுகின்றனர். இதனால், பிரசாதங்களை பக்தர்கள் தங்களது வீட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, பக்தர்கள் நலன்கருதி, பிரசாதங்களை ‘பார்சல்’ செய்து கொடுக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரசாதம் விலை உயர்வு தனிநபர்கள் விற்பனை செய்த போது, புளியோதரை, சர்க்கரை பொங்கல் உட்பட அனைத்து பிரசாதங்களும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில், தற்போது விற்பனை செய்யப்படும் புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் விலை, 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.