பதிவு செய்த நாள்
20
செப்
2026
10:09
விழுப்புரம்
புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இந்தாண்டு, புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 7:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஜனகவல்லி தாயாருக்கு, அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் கோவில் வளாகத்தினுள் வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை கனகவல்லி சமேத தாயார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்தியால்பேட்டை: உள்ள தென்கலை சீனிவாசா பெருமாள் சுவாமி சூரிய பிறபையில் அருள்பாலித்தார்.
சிங்கிரிகுடி: லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில், கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள சக்ரத்தாழ்வார் பெருமாள் கோவில் உட்பட புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி
அல்லிநகரம்: வரதராஜ பெருமாள் கோயில், பழனிசெட்டிபட்டி பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றன. கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு துளசி மாலை, சமர்ப்பித்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
போடி
சீனிவாசப் பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கேரள பக்தர்கள் தரிசனம் கம்பம்
கம்பராயப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளாக பெண்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். உத்தபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, திருமஞ்சனம், தேன், சந்தனம் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சின்னமனூர்: லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கோம்பை: ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மலைமேல் உள்ள ரெங்கநாத பெருமாளை தரிசிக்க கம்பம் வட்டார கிராம மக்களும், கேரள மாநிலம், ராமக்கல் மெட்டு, சதுரங்க பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 108 கிலோ துளசி மாலை அலங்காரம் பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு, பெருமாளுக்கு சுப்ரபாத சேவை துவங்கியது. பால், தேன், பன்னீர், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பாவை சேவித்தல், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் வரதராஜப் பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் கருட வாகனத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்
நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் 108 கிலோ துளசி மாலை அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தனர். ஹரே ராம நாம கீர்த்தனம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார் : மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கூத்த பெருமாள் கோயில் நேற்று புரட்டாசி வார முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். துளசி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அருகே மலை உச்சியில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது.
திருத்தணி: விஜயராகவ பெருமாள் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
பொன்பாடி கொல்லகுப்பம்: வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நெமிலி: ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.
திருத்தணி பெரிய தெரு: கிருஷ்ணர் கோவில் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள பெருமாள் மற்றும் பஜனை கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் உத்சவம் நடந்தன.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை, பிராமணர் தெருவில் அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று தம்பதி சமேதராய் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், உற்சவர் வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி வழிபாடு கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீவீரராகவப்பெருமாள், பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்துடன் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலையில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மாலை வரை கொடிமரம் அருகே வீற்றிருந்து அருள்பாலித்தார். பக்தர்கள் துளசி மாலை மற்றும் நெல்லிக்கனி மாலை சாற்றி பெருமாளை வழிபட்டனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டுக் குழு சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. தாசர்களிடம் பக்தர்கள் ஆசி கோவில் வாசலில் பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி ஒலி எழுப்பியபடி மயார் பூஜை செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்திருந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை தலைவாழை இலையில் சமர்ப்பித்தனர். மேலும், அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேகண்டி தட்டில் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம் திருவரங்கன் ஸ்ரீஅரங்கநாதப்பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், காரணப்பெருமாள் கோவில், சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், பெருந்தொழுவு பெருமாள் கோவில்.
மங்கலம் மற்றும் பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், சின்னாண்டிபாளையம் குளத்துப்புதுார் ஸ்ரீவரதராஜபெருமாள் மற்றும் வேணுகோபாலசுவாமி கோவில், வேட்டுவபாளையம் – அக்ரஹாரப்புத்துார் காரணப்பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமி புறப்பாடு, அன்னதானம், தாசர்களின் மயார்பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல்
தாடிக்கொம்பு: சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்ஸவ மூர்த்திக்கு நர்த்தன கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அபிஷேக, ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மலையடிவாரம்: சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. பக்தர்கள் மலர்களை வழங்கி வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.
பழநி: மேற்கு ரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், ராமநாத நகர் காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயில், கண்ணடிபெருமாள் கோயில், ரங்கநாதர் பாதம், பாலாறு அணை ஆஞ்சநேயர் கோயில், பாலசமுத்திரம் வீரஆஞ்சநேயர் கோயில், கரடி கூட்டம் சாந்தஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நத்தம்: கோவில்பட்டி பெருமாள் கோயிலில் பாமாருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் துளசி, மல்லிகை, ரோஜா மாலைகளை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
வி.மேட்டுப்பட்டி: கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: பருமரத்துபட்டி வெங்கடேச பெருமாள், பத்மாவதி, மகாலட்சுமி கோயில்களில் மகாலட்சுமி யாகம், விஷ்ணு சகஸ்ரநாம யாகம், லட்சுமி ஹயக்ரீவ யாகம், விஷ்ணு தன்வந்திரி யாகம், சுதர்சன மகா யாகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. காளாஞ்சிபட்டி ரங்கநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு திரவிய அபிஷேகம், கம்பீர மாருதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயிலில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தென்னம்பட்டி: ஆதிநாதபெருமாள் ரங்கநாயகியம்மன் கோயில், கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. வேதாந்த தேசிகர் கோவிலில், அன்னகூட விழா, நேற்று, நடைபெற்றது. அண்ணாசாலையில், புகழ்பெற்ற அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப் பெருமாள், வேதாந்த தேசிகர் கோவில் உள்ளன. இக்கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று அன்னகூட விழா விமரிசையாக நடந்தது. இவ்விழாவில், செங்கல்பட்டு நகரைச்சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ வேதாந்த தேசிகர் கைங்கர்ய சபா மற்றும் லசஷார்ச்சனை கமிட்டி ஆகியோர் செய்திருந்தனர்.
சிங்கபெருமாள் கோவில்: அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் சமேத அகோபிலவல்லி தாயார் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, மூலவர் மற்றும் உற்சவர் பிரகலாதவரதருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை முதலே சிங்க பெருமாள் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் உள்ள பழமையான தேவநாத பெருமாள் யோக ஹயக்கிரீவர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆப்பூர்: நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருப்போரூர்: நெல்லிக்குப்பம் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான அம்புஜவல்லி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தண்டலம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உத்சவம் கோலாகலமாக நடந்தது.
மானாமதி வைகுண்ட பெருமாள் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள பெருமாள் கோவில்களிலும் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மானாமதுரை: மானாமதுரையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வீர அழகர் கோயிலில் திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் முன் மண்டபத்தில் வீர அழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்காரங்களுடன் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வீர ஆஞ்சநேயருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மானாமதுரை: தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள், வேலூர் வேளாங்குளம் லட்சுமி நாராயண பெருமாள், வேம்பத்துார் பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயில் மற்றும் இளையான்குடியில் வேணுகோபாலப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடந்தது.
திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறந்து அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவருக்கு தீபாராதனை நடந்து பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். திருக்கோஷ்டியூர், சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு நடை திறந்து சுவாமி தரிசனம் துவங்கியது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. திருப்புத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூர், கொங்கரத்திக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்புத்தூர்: நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை நடைதிறந்து மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்து சுவாமி தரிசனம் துவங்கியது. காலை 10:30 மணிக்கு உற்ஸவருக்கு அபிேஷகம் நடந்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
கோவை
ஆவாரம்பாளையம்: ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில், உக்கடம் ஸ்ரீ பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜப்பெருமாள் கோயில், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி திருவிழா நடந்தது.
அன்னூர்: பழமையான கரிவரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. கோயில் உட்பிரகாரத்தில் பெருமாள் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொண்டாமுத்தூர்: பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோயிலில், நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பஜனை, உச்சிக்கால பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுண்டபாளையம் ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோயில், தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோயில் என, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திருப்பதி வெங்கடாலஜபதியை போல் அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. சங்கராபுரம்
சங்கராபுரம்: ஆற்றுப்பாதை தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனியப்ப செட்டியார் செய்திருந்தார்.
கடலுார்
புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள், ஜட்ஜ் பங்களா ரோடு கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி சிறப்பு பூஜை நடந்தது.
திட்டக்குடி: புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனையும், முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை: வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. மூலவர், திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் வேணுகோபால சுவாமி திருப்பதி வேங்கடேச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூலோகநாதர் கோவிலில் அலமேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விருத்தாசலம்
விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பெரியார் நகர்: ராஜகோபால சுவாமி கோவிலில் சுவாமி, செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.