சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா நடந்தது.
ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவை முன்னிட்டு. கடந்த 19ம் தேதி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தேரோடும் நான்கு வீதிகளில், ராஜராஜசோழன் உற்சவர் திருமேனியுடன் அடியார்கள் திருமுறையுடன் வீதியுலா நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்து சிதம்பரத்திற்கு அடியார்கள் வந்தனர். அதையடுத்து நேற்று காலை சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நடந்த விழாவில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பின், ராஜராஜசோழன், நம்பியாண்டார் நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு நடராஜர் கோவில் சன்னதியில் திருமுறைகள் வைத்து படைக்கப்பட்டது. தொடர்ந்து, ராமலிங்கம் ஆதீனம் தலைமையில் கிழக்கு கோபுர வாயிலிருந்து ராஜராஜசோழன் திருமேனியுடன் திருமுறை வீதியுலா புறப்பட்டு கொட்டும் மழையில் முக்கிய வீதிகள் வழியாக வந்து விழா மண்டபத்தை வந்தடைந்தது. வீதியுலாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.