புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2026 11:09
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி ஆவணி திருவிழா , தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து முக்கிய வைபவமான தெப்ப திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவை தயாரிக்கப்பட்டது. இரவு பூஜைகள் முடிந்து அம்மன் புறப்பாடும், கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளத்தில் உள்ள தெப்ப மிதவையில் எழுந்தருளி வலம் வந்தார். இதனை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் இரவு 8.30 மணி முதல் நாதஸ்வர தவில் இசை, பக்தி இன்னிசை, வீணை இனனிசை நடைபெற்றது. விழாவில் நாளை மாலை விடையாற்றி தெப்ப விடையாற்றி விழா நடைபெற உள்ளது.