தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2026 03:09
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்றன. மேலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஸ வாகனம், அண்ணபட்ஷி வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து வேத விற்பனர்கள், வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன், திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் ஈட, திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தார் செய்திருந்தனர்.