பதிவு செய்த நாள்
06
பிப்
2013
12:02
அலகாபாத்: வசந்த பஞ்சமியை முன்னிட்டு, வரும், 15ம் தேதி, மத்திய பிரதேசத்தின், போஜ்ஷாலா கோவிலில், இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என, மதத் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகில் உள்ள மலை மீது போஜ்ஷாலா என்ற கோவில் உள்ளது. போஜ ராஜன் என்ற மன்னன், சரஸ்வதி தேவிக்கு கட்டிய கோவில் அது என கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு தலம் யாருடையது என்பதில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டு, இருவரும் அந்த பகுதியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில், இந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம்களும் அந்த இடத்தில் வழிபாடு செய்கின்றனர். வசந்த பஞ்சமி நாளில், சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறந்தது என்பதால், 2006ம் ஆண்டின் வசந்த பஞ்சமி நாளில், போஜ்ஷாலாவில் வழிபாடு நடத்த சென்ற இந்துக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமையாக இருந்ததால், அந்த நாளில் முஸ்லிம்கள் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பதால், இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டின் வசந்த பஞ்சமி, இம்மாதம், 15ம் தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில், போஜ்ஷாலாவில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என, நரேந்திரநாத் சரஸ்வதி என்ற சங்கராச்சாரியார் தலைமையில், மகா மண்டலேஷ்வரர் யதிந்திர கிரி சாமியார் உட்பட பலர், ம.பி., அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டால், அலகாபாத்தில், மகா கும்ப மேளா விற்காக குவிந்துள்ள பக்தர்கள் அனைவரும், போஜ்ஷாலா செல்வோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தொல்பொருள் ஆய்வு துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடம், சர்ச்சைக்கு உள்ளான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த முறையும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.