பதிவு செய்த நாள்
25
செப்
2026
11:09
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவியில் பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல, விழுப்புரம் மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. மூலவர் பசுபதீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு நேற்று மாலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று, புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவாலயங்களில் மகா அபிஷேக பூஜைகள் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர், அதிகாரநந்தி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளிப்பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
ஆர்.எம்.,காலனி வி.ஐ.பி., நகர் சொர்ணாம்பிகை உடனுறை குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்ரகாளியம்மன் கோயில், எம்.வி.எம்., நகர் தென்திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதி, நாகல் நகர் பாரதிபுரம் சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு 16 வகை திரவிய அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், கோபால்பட்டி சிவன் கோயில், அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் கோயில், கணவாய்ப்பட்டி சிவன் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பழநி முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அ.கலையம் புத்துார் கைலாசநாதர் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், சித்தா நகர் புது நகர் யோகேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ரத்தினகிரீஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானலாயம் கோயில், வண்ணம்பட்டி சிவன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவர் முத்தீஸ்வரருக்கும், பரிவார மூர்த்தியான நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, விசேஷ மலர் அலங்காரங்களுடன் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின், பிரதோஷ மூர்த்தி நந்தி பகவான் மீது எழுந்தருளி, கோவில் வளாகத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார், உறுப்பினர்கள் தசரதன், பாலச்சந்தர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி, பெருவங்கூர் சாலை, சங்கரலிங்கர் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, நந்தியம்பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, சாமியார் மடம் செம்பொற் ஜோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், பெருவங்கூர் சாலை சங்கர லிங்கர் சித்தர் பீடம், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், முடியனுார், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கங்காதீஸ்வரர் கோவிலில் நந்தியம்பெருமான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதேபோல் தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ பூஜை நடந்தது.