பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாமல் இருந்தது. பக்தர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், கோவிலை புனரமைக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டு வந்தது. கேரள பணிக்கரின் உதவியை நாடி, தடங்களுக்கான காரணங்கள் குறித்து அறியப்பட்டது. இதன்படி, தோஷ பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து, மாகாளியம்மன் உத்தரவின்படி, கோவில் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் துவங்கின. கோவில் கர்ப்ப கிரகத்துக்கு மண் இடுதல் நிகழ்ச்சி இன்று காலை, 9.00 மணிக்கு நடந்தது. முன்னதாக, பாலாலயம் செய்யப்பட்டுள்ள மாகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையடுத்து, பூஜிக்கப்பட்ட மண்ணினை பக்தர்கள் அனைவரும் கர்ப்ப கிரகத்தில் இட்டனர். இந்நிகழ்ச்சிக்கு, அறநிலையத்துறை செயல் அலுவலர் வனராஜா, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, நடராஜன், விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணாதுரை, தீலீப் உட்பட பலரும் பங்கேற்றனர்.