விழுப்புரம், பெருமாள் கோவில் தெருவில், கோட்டை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டிவனம் திண்டிவனம் அருகே உள்ள தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால், மகா அபிஷேகம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர், 108 சங்காபிஷேகம் மற்றும் கலச நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து,வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி விஷ்ணு கணபதியாக அருள்பாலித்தார். பின்னர் உட்பிரகாரத்தில் உலா வந்து , ஊஞ்சல் உற்சவம் நடந்தது.