பதிவு செய்த நாள்
30
செப்
2026
03:09
திருப்பூர்: ‘‘நம்முடைய முயற்சி இருந்தால் மட்டுமே இறைவனை அடையலாம் என்று எண்ண முடியாது; இறைவனிடம் சரணடைந்தால் அவரே வந்து ஆட்கொள்வார்,,’’ என பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
திருப்பூர் ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், ஹார்வி குமாரசாமி மண்டப திருவருள் அரங்கில், நேற்று நடந்த திருவாசக தொடர் பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:
‘மறைக் கோலம் காட்டி அருளாலே’ என்று சொல்லி அந்தணராக திருப்பெருந்துறையிலே வந்து காட்டிய பெருமை அந்த சிவனுக்கு உரியது. வேத விற்பன்னர்களுக்கும், யோகத்தால் சிறந்த பயிற்சி உடையவர்களுக்கும், இந்த உடலை வருத்தி தவஞ் செய்யக்கூடியவர்களுக்கெல்லாம் கூட அவர்கள் தங்களுடைய தன்முனைப்பினாலே கடின முயற்சி செய்தால் அவர்களுக்குக் கிடைக்காதவர் அந்த பெருமான்.
அப்படிப்பட்ட தன்னேரில்லோன் என்று சொல்லி உவமையில்லாத பெருமான் எனக்காக எளிவந்து திருப்பெருந்துறையிலே காட்டி அருளினான் என்கிறார். அந்தச் செய்தியின் பொருள் என்வென்றால் நம்முடைய முயற்சியினா லேதான் நாம் பெருமானை அடைய முடியும். முயற்சி செய்யாதோருக்கு இறைவன் கிடைக்கமாட்டான் என்பது தான்.
அவனைச் சார்ந்தரென்று வழிபாடு செய்வோர்களுக்கு அவன் கிடைப்பான். அதைத்தான் திருப்பெருந்துறையிலே அவன் வந்தான் என்று சொன்னால், மறைக்கோலம் காட்டி என்று அந்தணனாகவும், அதாவது ஆசிரியக் கோலமாக குருநாதராக வந்து தம்மை ஆட்கொண்டான் என்ற ஒரு அருமையான சிறப்புச் செய்தியை அங்கு வந்து தருகிறார்.
அதுமட்டுமல்ல, அந்த அன்பு... அவன் ஆட்கொண்டதனால் தனக்கு ஏற்பட்ட அனுபவம், அந்த ‘உளையா அன்பு’ என்று சொல்லி வருந்தாத, ஒரு வெறுப்பில்லாத அன்பை என்மேல் அவன் காட்டினான். அதனால் எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவம் தான் அந்த சிவானந்த அனுபவம்.
இதன் வாயிலாக தெரிய வருவது என்னவெனில், நம்முடைய முயற்சியினால் பெருமானை அடைதல் என்பது இயலாத காரியம்; அவனிடம் சரணடைந்து விண்ணப்பிப்பவர்களை அவனே வந்து ஆட்கொள்ளக்கூடிய கருணையுடையவன் என்பதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.