எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இ.சித்துார் நல்லமநாயக்கன்பட்டி அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மழை பொழியவும், கிராம மக்கள் செழிப்புடன் வாழவும் வேண்டி கொழுக்கட்டைகளை சூறையிட்டு வினோத நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது.
நேற்று மாலை நடந்த வழிபாட்டிற்கு பெண்கள் தங்கள் வீடுகளில் கொழுக்கட்டைகள் செய்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர். அய்யனாருக்கு படையலிட்டு அபிஷேகங்கள் நடந்த பின், ஊர் தலைவர் செவந்தியப்பன் படையல் செய்யப்பட்டிருந்த கொழுக்கட்டைகளை எடுத்து சூறைவிட்டார்.
அங்கு கூடியிருந்த அனைவரும் போட்டியிட்டு கொழுக்கட்டைகளை கீழே விழாமல் தாவி தாவி பிடித்தனர். இவற்றை கீழே விழாமல் பிடித்துவிட்டால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என கிராம மக்கள் நம்புகின்றனர்.