பதிவு செய்த நாள்
01
அக்
2026
02:10
மைசூரு: தர்மன் படப்பிடிப்புக்காக மைசூரு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தார்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மைசூரின் சோமநாத்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, செப்., 28ம் தேதி மைசூரு வந்த ரஜினிகாந்த் வந்திருந்தார். தனியார் வளாகம் ஒன்றில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர், வளாகம் வெளியே குவிந்தனர். இது ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவரும், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து நுழைவு வாயில் வரை ஆட்டோவில் வந்தார். வெள்ளை வேஷ்டி, சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த அவர், ரசிகர்களை பார்த்து கையசைத்து, வணக்கம் செலுத்தினார். பின், மீண்டும் ஆட்டோவில் சென்றார்.
ராடிசன் ஹோட்டலில் மூன்று நாள் தங்கியிருந்த அவர், நேற்று காலை சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க வந்தார். இவர் வரும் செய்தி அறிந்த ரசிகர்கள், கோவில் வெளியே குவிந்தனர். இவரின் பாதுகாப்புக்காக ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுவாமி தரிசனம் செய்த பின் வெளியே வந்த அவர், ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.