சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2026 08:10
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி 10 நாள் திருவிழா இன்று காலை திருநாமக் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தர்மபதியில் திரண்டனர். அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை கையில் ஏந்தியபடி பதியை வலம் வந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் திருநாமக் கொடியுடன் கோவிலை வலம் வந்து, கொடிமரத்தின் அருகே திரண்டனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, சங்கநாதம் ஒலிக்க, “அய்யா அரஹர சிவ சிவ” என்ற நாமத்தை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழங்கினர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பணிவிடைகள் நடைபெற்றன. பின்னர் திருநாமக் கொடி ஏற்றப்பட்டு, புரட்டாசி திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வின்போது பக்தர்கள் அய்யாவின் திருநாமத்தை உச்சரித்தபடி வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அய்யாவுக்கு பால் பணிவிடை மற்றும் உகப்படிப்பு நடைபெற்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு, காளை வாகனத்தில் அய்யா பதியை வலம் வருகிறார். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரள உள்ளனர்.
மேலும், திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் தினந்தோறும் மாலை நேரத்தில் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஒவ்வொரு நாளும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதியை வலம் வருகிறார். இதனால் விழா நாட்களில் தர்மபதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டும். விழாவின் 8-வது நாளான 9-ஆம் தேதி, இரவு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற உள்ளது. புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த புரட்டாசி திருவிழாவையொட்டி, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.